கீதாஞ்சலி

இது முதல் மழை......... சின்ன துளிக்குள் கடலாக...... ஒற்றை சொல்லுக்குள் மடலாக.....

தனிமை கொஞ்சம் ஓவராய்...........!

யாராவது கொஞ்சம் கோபமா திட்டிட்டாங்கன்னா இப்பல்லாம் "தனிமையாய் வாழக்கடவாய்" னு சபிக்கணும் போலத்தோனுது.
எல்லோருமே சொல்றமாதிரி தனிமை சுகம் இல்லீங்க நரகம். வேதனை. இன்னும் என்னன்ன வார்த்தைகள் இருக்குமோ அதெல்லாம் போட்டு நீங்க நிரப்பிக்கலாம்.....

எப்பவும் பரபரப்பாவும் கூட்டத்தொடேயும் வாழற இதம் இனிமை தனிமை கொடுக்க தவறிவிடுகிறதுன்னு கொஞ்சம் பெரிசா லெக்ச்சர் பண்ணலாம்.
தண்டவாளம் பக்கத்த்துல வீடு கிடைக்கறப்ப எரிச்சல் அடைகிற உங்களை போல நானும் ஒரு காலத்தில் வேண்டுமானால் இருந்திருப்பேன். ஆனால், இப்பல்லாம் அப்படி இருக்க முடியறதில்ல. ஜன்னல் திறக்க, போற/வர ரயில்களை ரசிக்க முடிகிறது. அதன் தண்டவாள இசைஅமைப்பில்கண்களை மூடி கனவுகளை அழைக்கத் தொடங்கிவிடுகிறேன்னு சொன்னால் அது கொஞ்சம் பலருடைய ஸ்லாங்கில் ஓவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

மார்கெட் பகுதிகள், எப்போதுமே கூட்டத்துக்கு பஞ்சம் இருக்காத பஸ் ஸ்டாண்ட் இன்னப்பிற இடங்களில் கவிதைகளாகவும், கதைகளாகவும், எழுத்துகளாகவும் எத்தனையோ புதுபுது விஷயங்கள் "என்ன எடுத்துக்கோ என்ன எடுத்துக்கோ"ன்னு வேண்டிக்கிட்டு நிக்கறாப்பல தோணுது. உங்களுக்கு தோணுமா????????
ஆனால் , சில விஷயங்களை தனிமை, கூட்டத்தால் அழிக்கப்பட்டு விடுகிறது.திரைப்பட கனவுகளில் இருக்கிற எனக்கு இந்த தனிமை ஒரு பெரிய சுமைதான்னு சொல்வேன்.
குரூப்புல பாடற பாடகர்கள், பாடகிகள் அதிகம் சந்திக்கிற வாய்ப்பு கிடைப்பதுண்டு.
ஒரு சிறந்த பாடலுக்கு கூட்டத்தில் நடனமாடிய நடனக் கலைஞர்கள் கூட பலர் எனக்கு நண்பர்களாக இருக்கின்றனர்.
எப்போதாவது கேட்கிற ஒரு பாடல் fm களில் ஒலிக்கிற சந்தர்ப்பங்களில் தன்னுடைய குரல் எது என்று அடையாளப்படுத்த அலைபாய்கிற அவஸ்தை கோரஸ் கலைஞனுக்கு ஒரு வேதனை தான்.
அந்த பத்து பதினைந்து பேர்களில் தன்னை அடையாளம் காணமுயலும் தன் உறவு/நடப்பு சகாக்களை ஆர்வத்துடன் பார்க்கும் அந்த பரிதாபக் கலைஞனின் பார்வைதான் என் தனிமைக் குறித்தான பார்வையும்!!!!!!
இந்த அவஸ்தை உங்களுக்கு நிச்சயம் உண்டாகி இருக்கலாம்....

திரைப்படத்துறையில் மட்டுமில்லை எந்த துறையிலும் கூட்டு முயற்சியில் கடைசியில் தனித்துவமாய் தெரிபவன் கூட்டத்தை தனிமைப்படுத்தி தன்னை பிரபலப் படுத்திகொள்கிறான் எப்போதும்....
தனிமையில் விளைவது அழுகையும் ஒப்பாரியும். கூட்டத்தில் தான் கும்மி அடிக்கமுடியும். கூடவே குட்டுக்களை அன்பாய் பரிமாறிக்கொள்ளமுடியும்.
தனிமை எப்போதுமே நரகம் தான்...

என்னங்க நான் சொல்றது சரிதானே?????????????????????

பென்சில்.......!



காதில்

செருகி வைத்த பென்சில்

கணக்கெழுதும்

மளிகைக்கடை அண்ணாச்சி

நடராஜ் பென்சிலில்

ஆரம்பித்த நட்பு...



பூப்போட்ட

பென்சிலோடும்

ரப்பர் இணைத்த

வாசனை பென்சிலோடும்

வசதி பரிமாறும்

பாலுவின் பென்சில் ஊக்கில்

குத்துப்படும்

எங்கள் பள்ளிக்கூட மரபெஞ்ச்....



"செவன் கிளாக்" பிளேடில்

கூர்சீவும் சந்தர்ப்பங்களில்

விரலில்படும்

ரத்த துளிகளில்

அப்பா வாங்கித்தரும்

"காம்ளின்" பென்சில்

சிவப்பாகிபோவதுண்டு!



பென்சில் ஸ்டாண்ட்

வாங்கி

வரிசையாய் அடுக்கி

படம் வரையும்

ஓவிய பாடவேளையில்

அகப்படாமல் போவதுண்டு

வெள்ளை பென்சிலின்

உபயோகம்

பரிதாபமாய்

பென்சில் ஸ்டாண்டில்....



பென்சில்கள்

எப்போதும்

கிறுக்கிக்கொண்டேதான் இருக்கும்

சீவுகிறபோதும்

எழுதுகிறபோதும்.....



ஆனால்

பென்சில்களைவிட

பேனாக்களே

பலருக்கு பிடித்த ஒன்றாகிவிடுவதுண்டு!



நூல்கட்டி

கையெழுத்துப்போட

நூலகத்தில் கட்டிவைத்திருக்கும்

அந்த பென்சிலை

பார்த்தபோதுதான்

புரிந்துகொள்ள வேண்டயுள்ளது

மாட்டுக்கு மட்டுமல்ல

பென்சிலுக்கும்

மூக்கணாங்கயிறு

அவசியம்தான் போல!

ஒரு காலத்தில் அவளும் தேவதை தான்.......


அவளை இப்படியொரு சந்தர்ப்பத்தில் சந்திப்பேன் என்று கனவில் கூட நினைத்திருக்கவில்லை. எப்படி இது சாத்தியம்....ஒருவேளை அவளை போல யாரோவோ.... அப்படி இருந்தால் முதலில் சந்தோசப்படுவது நானாகத்தான் இருக்கமுடியும். ஆனால் அது அவள் தான் சந்தேகமேயில்லை.......
எங்கள் தெருவின் தேவதை அவள். அவள் குடும்பம் வந்த பிறகுதான் எங்கள் நண்பர்கள் வட்டாரமே கொஞ்சம் தூர் வாரப்பட்டது என்றால் அது பொய்யில்லை. சின்ன வயசு அத்தனை விளையாட்டுத் தனங்களையும் வசீகரித்தவள் அவள்.ரொம்பவே அழகு.....

தங்களை பார்க்கமாட்டாளா என்பதாகவே ஒவ்வொரு குரூப்பும் எதிர்பார்க்க அவள் கொஞ்சம் திமிர் பிடித்தவள் போல் தெரிய ஆரம்பித்ததில் ஆச்சர்யமில்லை.

கல்லூரி சேர்ந்தபோது அவளுக்கு கல்யாணம் ஆனது....அம்மா கூட அவள் திருமணதிற்கு சென்று வந்தாள். அதன் பிறகு படிப்பு வேலை கல்யாணம் இப்படியாக ஓடிவிட்டது வாழ்க்கை. இந்த நிலையில் அவளை இப்படி ஒரு கோலத்தில்.... நினைக்கவே மனம் துடித்தது. நான் கூட அவளை ஒருதலையாய் நேசித்திருக்கிறேன். எப்படி இருந்தவள் ......ஒரு பழைய கசங்கிய காகிதமாக.....மனநிலை சரியில்லையா.....குடும்பத்தினர் யாரும் இல்லையா ????????????

மனைவியை பார்த்தேன். திருமணமாகி பத்தாண்டுகள் ஓடிவிட்டிருந்தாலும் இளமையாகவே தெரிகிறாள். வாழ்க்கை எந்த தேவதையையும், எந்த தேவனையும் விட்டு வைப்பதில்லை போல.
எங்கள் தெரு தேவதைக்காக கொஞ்சம் வேதனை பட மட்டும் தான் முடிந்தது.

“தேசம்”


மலைகளாலும், மரங்களாலும், நதிகளாலும் சூழப்பட்டதல்ல இந்த தேசம்…!

இருட்டுக்கு வெள்ளையடிக்கும் ஒரு பகல்….. கனவுகளுக்கு இமைத்திறக்கும் ஒரு இரவு….. வாழ்வின் கதவுதிறக்கும் ஒரு சந்தோஷம்…..

ஒவ்வொரு திசையிலும் உணர்வுகளால் எழுதப்பட வேண்டிய எத்தனையோ விஷயங்களை மென்மையாய், உண்மையாய் ஒரு தென்றலாய் வீசிப்போகிறதே அந்த இனிமையின் அடையாளம் – நம் தேசம்!

சக்கரம் சுழல்கிறது – ராட்டினம் சுழல்கிறது – பூமி சுழல்கிறது – வித்தியாசங்களை பிரிக்கிற அறிவு – முன்வைக்கிற முதல்கால் “சமத்துவம்.”

மதங்களால் மனிதன் பிணைந்திருந்தாலும் அன்பினால் இணைத்திருக்கிறது நம் தேசம். கண்ணீரின் உப்புக்கரிப்புக்கும், கடல்நீரின் உப்புக்கரிப்புக்கும், வியர்வையின் உப்புக்கரிப்புக்கும் அழகாகவே அடையாளங்கள் தருகிற நம் வரலாறு புள்ளிவிவரங்களால் மட்டுமே அடங்கிவிடுவதில்லை. ரங்கோலியாய் அழகுப்படுத்தி பார்க்க ஆனந்த கூத்தாடுகிறது ஒவ்வொரு முறையும்….

எத்தனை படையெடுப்புகள், எத்தனை யுத்தங்கள், எத்தனை விதமான இன்னல்கள். தாங்கினோம், வாங்கினோம், நிமிர்ந்தோம், இன்று எழுந்து நிற்கிறோம்!

போராட்டம் என்கிற நீரோட்டத்தால் தான் தேசத்தின் நந்தவனம் பூத்துக்குலுங்குகிறது. அதன் தேரோட்டம் இப்போது திக்கெட்டும்….!

மின்மினிப் பூச்சியை தீப்பெட்டிக்குள் சிறைப்பிடிக்கும் சிறுப்பிள்ளைத்தனம் – தோட்டாக்களின் களவாடலில் துப்பாக்கியுடன் நிராயுதபாணியாய் இருக்க உண்டாகிற துர்ப்பாக்கியத்தனம் – கண்களை கட்டிவிட்டு உலகம் இருட்டு என்பதாய் போதிக்கும் அதிமேதாவித்தனம் –

தனங்களை சீர்ப்படுத்தவும், தழைகளை களையெடுக்கவும் வேண்டிய பூமி “சுதந்திரம்” என்பதை சத்தமாய் உச்சரித்தது!

சிறகு வெட்டி பறக்க விடுவதா சுதந்திரம்….
ஜன்னல் சாத்தி இருட்டுக் கொடுப்பதா சுதந்திரம் ….

இதோ சமுதாயம் தன் சிந்தனைகளை இப்படி கரும்பலகையில் எழுத துடிக்கிறது.

கப்பலை மிதக்கவிட்டு கலவரப்படுத்திய சகோதரர்கள் வாழ்ந்த தேசத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

கப்பல் கட்ட துணியாது கயத்தாறில் கர்ஜித்த கம்பீர மனிதன் சுவாசித்த பூமியில் சுவாசித்து கொண்டிருக்கிறோம்….

ஒவ்வொரு வார்த்தையையும் அணுகுண்டுகளாக்கி சமூகம் தன் இதய துடிப்பாக்கிய அந்த எட்டையப்புர கவிதைக்காரன் நடந்த பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

தேசத்தின் எல்லா விலா எலும்புகளும் கெம்புகோல்களாகி இருந்த காலங்களில்ர கண்ணியம், பண்பாடு,. கலாச்சாரம் பேணிய அடையாத்துக்குரிய சமூகம் நம் அனைவரின் சொத்து!

நிறங்களால் அந்நியப்படாத கொடி நம்முடையது. மனங்களால் அந்நியப்படாத சின்னம் நம்முடையது. தாமரைக்குளங்களிலும், புலிகள் சரணாலயங்களிலும், ஆலமர விழுதுகளிலும் வீசிவிட்டு தான் நம் காளரம் நுழைகிறது நம் தேசத்தின் காற்று!

முதல் முறையாய் வேர்க்கிற காற்றுக்கு விசிறி வீசுகிற பாக்கியம்…..

முதல்முறையாக தூசுதுடைத்து இருந்ததாக சொல்லிக்கொள்கிற வரலாறு நம் பாக்கியம்!....

எல்லா நதிகளிலும் நனைந்து எழுந்து ஈரம் சொட்ட வரவே பிரியம் காட்டும் நம் சங்கீதம்!

உலக வரைப்படத்தில் “இந்தியா” – எழுதப்பட்ட வாக்கியத்தை விட எழுந்து நிற்கி வாக்கியமாய் இன்று பார்க்கப்படுவது யாரால் ?

எத்தனை சாதனைகள், எத்தனை கண்டுபிடிப்புகள், எத்தனை பங்களிப்புகள் – உலகம் உற்று பார்க்கிறது. அதன் பறவைப்பார்வையில் நம்தேசம் இன்னும இன்னும் பிரமாண்டமாய்…..

ஒவ்வொரு சுதந்திர தினமும் ஏதோ “நாட்காட்டியின் அடையாளம் ” என்பதைவிட நம் இதயத்துடிப்பின் அடையாளம் என்பதாகவே சொல்லவேண்டியிருக்கிறது!

1947 ஆகஸ்டு 15க்கு ஒரு கௌரவம்! எதையும் உணர்வுகளால் மட்டுமல்ல இதயங்களாலும் உச்சரிப்பதே நம் தேசத்தின் இயல்பு!

கண்களை மூடிக்கொண்டு பார்க்கிறபோதும் பார்வைகள் விஸ்தாரமாகவே தெரிகிறது.

நமக்காக பார்க்கிறது நம் தேசம்!
தேசத்திற்காக வாழ்கிறோம் நாம்!
நேசமாய் சொல்வோமா – வாழ்க நம் தேசம்!

(SAIMIRA 24.7 இணைய வானொலியின் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் பதிவு செய்யப்பட்ட உரைச்சித்திரத்தின் எழுத்து வடிவம்).
*கொஞ்சம் காதுகொடுக்கலாமே பகுதியை கிளிக்கினால் கேட்க்கலாம்

கொஞ்சம் வாசிக்காலாமே.....!

எனது நண்பர் திரு.பாக்கியம்
சங்கர் இந்த வார ஆனந்த விகடனில் ஒரு கவிதை எழுதி இருக்கிறார் ...
இதோ அந்த கவிதை........

கொஞ்சம் பார்க்கலாமே........

மனிதர்கள் தான் கம்பிகளுக்கு பின் இருக்க வேண்டுமா......நாங்கள் இருந்தால்???????????????

எங்கள் வீட்டு சுட்டிகளின் வாகனம் உங்களை எங்கு இட்டு செல்கிறது??????????????????
எல்லா மகிழ்ச்சிக்குள்ளும் நீங்களும் இருக்கலாம்.......

கதவு திறக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பங்களுக்காகவும்.....


எத்தனை முறை கதவு திறக்கப்படுகிறது -
எத்தனை முறை அழைக்கப்படுகிறோம் என்பதில் இருந்து தொடங்கி விடுகிறது படைப்புக்கான களம்.
மாட்டின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் மணியின் ஒலியில் ஆரம்பித்து, கரி படிந்து இருட்டை ஓட்டிக் கொண்டிருக்கும் எங்கள் வீட்டுச் சிம்னி விளக்கு வரை முடிந்திருக்கிற ஒரு பகல் என்னை மெல்லச் சாப்பிடத் தொடங்கியிருந்ததை மறுப்பதற்கில்லை.
நிறைவான விஷயங்களை அடிக்கடி ஞாபகப்படுத்தாமையால் குறைவான செய்திகளை மட்டுமே பேசிவிட்டு அமர்ந்துவிடுகிறோம். இல்லை அமர வைக்கப்படுகிறோம். என்னையும் எனக்குள் நிகழ்பவற்றையும் அடக்க அரும்பாடுபட வேண்டியிருக்கிறது. சிலநேரம் அடங்கிவிடுகிறேன்.
பலநேரம், அடக்கப்பட்டு விடுகிறேன்.அப்படி அடங்கிவிட்ட கர்வத்தில் காலரை இழுத்து விட்டபடி நடக்கிற போது லேசான சுயபச்சாதாபங்களைப் பெறவேண்டி எட்டிப் பார்க்கும் படைப்பாக ஆகிவிடுமோ என்கிற பிரக்ஞையில் எழுத மறுத்ததும், எப்போதாவது எழுதத் துடித்ததும் படைப்பாளன் என்கிற மாய வலையை எனக்குள் ஏற்படுத்தவில்லை என்பதை நண்பர்கள் வாயிலாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அது ஒருவித ஆறுதல். அந்த ஆறுதலைக்கூட ரகசியமாய் அனுபவிக்கிற அனுபவம்தான்.
ஒவ்வொரு நீராட்டலும் திவலைகளாய் உருட்டிச்சென்று கழுவிவிடுகின்றன எல்லாவற்றையும் முதல் குளியல் ஆரம்பித்து வைத்த சில்லிப்பு இன்றும் தொடர்கிறது என்றால் ஒருவித மயக்கம் கலந்த உணர்வுதான் வந்து போகிறது.
கவிதை, சிறுகதை, நாவல் - இப்படி எழுத்தின் வடிவங்களில் எழுதிப்பார்க்க ஆரம்பித்ததன் விளைவு படைப்பாளி என்று சொல்லிக்கொள் என்கிறது. இருந்தாலும், படைப்பாளிகளின் சுதந்திரம் வாசிப்பாளனின் கையில் இருக்கிறது என்பதும், வாசிப்பாளனின் எல்லை படைப்பாளனின் படைப்பால் தீர்மானிக்கப்படுகின்றன என்பதும் என்னைப் பெண்மூலமாக்கிப் பார்க்கிறது என்பது நிஜம்!
"காதல் திருடா" திரைப்படமும் திரைத்துறையில் பாடலாசிரியராக வெளி தெரிந்திருந்தாலும் இன்னும் கனமான படைப்பை எழுதவில்லை என்கிற ஏக்கம் இருக்கிற இந்தத் தருணத்தில் இந்தத் தொகுப்பு.
வானொலி, தொலைக்காட்சி, ஊடகத்துறையில் தயாரிப்பாளராக, அறிவிப்பாளராக, இயக்குநராக, தொகுப்பாளராக, பணிபுரிந்தாலும் பத்தாண்டுகளுககும் மேலான ஏக்கம் தீராத ஒட்டகப் பயணமாய் நீளவே செய்கிறது.
முதுகுகாட்டி குளிக்கும் கிராமத்துப் பெண்ணும், கண்ணாடி பார்த்துப் பல் துலக்கும் பட்டணத்து யுவதியும் நிறைந்த உலகில் நிழல் மிதிக்க அலறி வெற்றுப்பாதத்துடன் நடக்கிற எப்போதுமே பாவமாய் பார்க்கிற எழுத்துக்களை முன்னெடுத்துச் செல்லவே பிரியப்படுகிறேன்!
கறுப்பு வெள்ளையில் தீட்டப்பட்ட எந்த ஓவியமும் வண்ணங்களில் நனையாத கொடுமையை வெளிப்படுத்துகிறது என்று சொல்வதில்லை. கறுப்பும், வெள்ளையும் வண்ணங்களாக அங்கீகரிக்க படைப்புகளை நேர்மையாய்ப் பார்க்கிற மனோபாவம் வரும்! வரலாம்!
முன்னெடுத்துச் செல்கிற எதையும் நிறுததி விசாரிக்கிறவர்களிடம் கொஞ்சம் மௌனமாய் விசாரியுங்கள் என்கிறேன். பேசினால் ஒருவேளை உங்கள் மௌனம் அர்த்தமாகக் கூடும். ஜன்னல்கள் சாத்தியோ, கதவடைத்தோ மறுதலித்தாலும் ஒவ்வொரு முறையும் தன்முயற்சியை என்னில் இருந்தே ஆரம்பிக்கிறது எழுத்து வேதாளம்.பூச்சாண்டியைக் காட்டி சோறூட்டும் நிலைமையில் இப்போது நான்!
(எனது கவிதை தொகுப்பான "சயனகிளைகளில் கீழிறங்கும் வனம்" தொகுப்பின் என்னுரையில் இருந்து)

மழை விட்ட பிறகும்......





சந்திப்புகள் பலவிதங்களில் நிகழ்கின்றன. எந்த சந்திப்பிலும் மனம் ஒன்றிவிடுவதில்லை. இருந்தாலும் சில சந்திப்புகளை மனம் அசைபோடவே செய்கிறது.

ஒருவரை நீண்ட நாட்களுக்கு பிறகு எதிர்பாராமல் சந்தித்து விடுகிறோம். அந்த அபூர்வ தருணம் மண்வாசனையை போல் மனதில் வீசும்.காலிங் பெல்சத்தம், செல்போன் சிணுங்கல், கதவு தட்டும் ஓசை இப்படி எந்த வடிவத்தில் வரும் அழைப்புகள்....தெரியாத ஒன்றாகவே இருக்கின்றன. இருந்தும் சந்திப்பின் இனிமை சுகம்.

சிறைச்சாலைகளில்சந்திக்க வரும் உறவுகள்,நண்பர்கள் எல்லோரும் சோகம் சுமந்தாலும் எதோ ஒன்றில் விட்டத்தை பெரிதாக்கவே செய்கின்றனர் என்பதை சொல்லவேண்டியதில்லை.

பழகிய இடம், பேசிய வார்த்தைகள்,பார்த்த காட்சிகள் எல்லாமும் கம்பிகளுக்கு பின்னால் சடுகுடு ஆடலாம்.......உங்களுக்கு எப்படியோ என்னால் இப்படித்தான் இருக்க முடியும் என்பதை சொல்லாத சிலரின் அவதானிப்புகள் கேள்விக்கேட்க்கலாம். " எல்லா சந்திப்புகளும் சுகமா சோகமா என்று" ??????

என்னையும் உன்னையும் சந்திக்க வைத்த அந்த தருணத்தை என்ன வென்று சொல்வது-இப்படி கேள்வி கேட்க காதலும் ஒரு காரணம் அவ்வளவுதான்.
ஓராண்டுக்கு பிறகு இன்று ஷார்ஜாவில் இருந்து ஜியாவுதீன் குடும்பத்தினர் வந்திருந்தனர். UAE யில் உங்கள் சக்தி 94.7 பண்பலை வானொலியில் பணியில் இருந்தபோது நேயராக எனக்கு அறிமுகமான குடும்பம் இன்று சென்னைக்கு அதுவும் எனது அலுவலகத்திற்கு வந்தனர். மனது முழுக்க மகிழ்ச்சியுடன் அவர்களின் வருகை என்னை உற்சாக படுத்தியது.....வெளியே லேசான மழை....எனக்குள் இதமான அன்பின் மண் வாசனையை நுகரமுடிந்தது.

வானொலியில் இப்போதெல்லாம் உங்களை போல் நிகழ்ச்சி யாரும் வழங்குவதில்லை UAE யை விட்டு நீங்கள் வந்த பிறகு ஒரு பெரும் இழப்பை எங்களால் உணரமுடிகிறது எனபதாக ஜியாவுதீன் பேசியது சந்திப்பின் அவசியத்தை விட அந்த தருணத்தின் சந்தோசம் என்னை வெகுவாக கவர்வதாக இருந்தது.

நம்மை சந்திக்க வரும் நமது நண்பர்களாகட்டும், மற்றவர்களாகட்டும் சில இழப்புகளை பற்றியோ இல்லை பெற்றவைகளை பற்றியோ பேசுவது சம்பிரதாயமாக அமைந்து விடுகிறது என்பதை சொல்லமால் இருக்க முடிவதில்லை.இன்னுமிரண்டு நாளில் ஷார்ஜா செல்லவிருப்பதாக சொன்னார். சக்தியில் வேலையில் இருந்த போது இருந்த என் நினைவுகளை இந்த சந்திப்பு மீட்டு எடுப்பதாகவே பட்டது.

ரயில் சிநேகம் கூட சில நேரம் அபூர்வ விசயங்களை பரிமாறுவதாக அமைந்து விடலாம். பிறகு அந்த சந்திப்பின் தொடர்ச்சியை மனம் எதிர் பார்க்கவே செய்யும்...மழை விட்ட பிறகும் இலைகளின் வழியாக நீர் சொட்டிக்கொண்டு இருக்கிறதே அது போல.......

Followers

My photo
dubai, dubai, United Arab Emirates
துபாயில் உள்ள 89.4 தமிழ் பண்பலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறேன். வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என ஊடகங்களில் பணிபுரிந்துள்ளேன். என்னுடைய படைப்புகள் 9 புத்தக்கங்களாக வெளி வந்து இருக்கிறது. உணர்வுகளை தளங்களில் பகிர்ந்துகொள்ள துடிக்கும் தோழமை நெஞ்சத்துடன் நான்....

Total Pageviews

GEETHANJALI. Powered by Blogger.

Live Traffic Feed

vaarppu
CO.CC:Free Domain