
நேற்று இரவு நல்ல மழை.....நள்ளிரவை தாண்டிய பொழுதில் உறக்கம் கலைத்தது . ஒரு செல்ல பிராணியை போல் அது தன் வாலாட்டலை என்னிடம் இருந்து தொடங்குகிறதோ என்பதாய் தோன்ற விழிப்பு வந்தது. உள்ளறையில் குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்தனர். சடசடவென்ற அதன் அழைத்தலில் என்னை மறந்து ஜன்னல் திறக்க வெளியே பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்தது அது.

குடைகள் தேவை படலாம். காலையில் அவகாசம் இருக்காது. இது நாள் வரை அவசியம் என்பதாக அது பார்க்க படவில்லை. தேவை என்பது ஒன்றின் தொடக்கத்தில் இருந்து ஆரம்பிப்பது. மனைவியை எழுப்பினேன். அவளின் சிணுங்கல் வெளியே மழை பெய்கிறது என்பதான என் தகவலில் அதிராதவளாகவே தெரிந்தாள். குடை குறித்தான என் சிந்தனை காகித கப்பலாக மிதக்க அரம்பித்த்திருந்தது.



சாலையில் நேற்றைய மழையின் மிச்சமும், என் முதல் நாவல் "வேர்" தொடக்கத்திலும் மழை என்னை நனைத்திருந்து. பக்கங்கள் ஈரமான உணர்வை அவ்வப்போது வெளிப்படுத்தவே செய்கின்றன என்பதை குடைகள் கொண்டு தான் தீர்மானிக்க முடிகிறது. இருந்தாலும் மழை சுத்தமாய் பங்குனி மாத தொடக்கத்தில் எட்டிப்பார்த்தது சூரியனுக்கு ஐஸ் வைப்பதாவே இருந்தது. ஒருவேளை நமக்கு வைத்தோ என்னவோ????????????எந்த ஜன்னல் கம்பிகளிலும் உலராத ஈரம் மிச்சம் இருந்ததை மறுப்பதற்கில்லை.