கீதாஞ்சலி

இது முதல் மழை......... சின்ன துளிக்குள் கடலாக...... ஒற்றை சொல்லுக்குள் மடலாக.....

அறைகளின் வெளியே...!வீதியில் இருந்து
அன்னியப்பட்டிருந்தது
அந்த அறை நம்மை இணைத்த
நம் வீட்டைப்போல்!

பழகிய சாலை
பார்த்த முகங்கள்
அடையாளங்களை வைத்தே
அடைந்துவிடுகிறோம் சுலபமாய்....!
ஆணியில் தொங்கும்
சட்டைப்பை உள்ளிருக்கும்
சில்லரைப்போல்
சும்மா இருந்துவிடுகிறோம்
அவசியமில்லாத நேரங்களில்!

பந்துப்பட்டு
உடையாத கண்ணாடி ஜன்னல்
அழைப்புமணியோ கதவுத்தட்டலோ
கேட்காத அறை
எறும்புகள் பார்க்காத
விஷேச தின கோலம்
குழந்தைகள் கிறுக்காத சுவர்கள்
-எதோ ஒன்றில்
உட்கார்ந்திருக்கும் நம் தாம்பத்தியம்!

மின்விசிறியின்
புழுக்கம் தாளாமல்
கதவுக்கு வெளியே காத்திருக்கலாம்
சில கவிதைகளும்
சில கனவுகளும்
குடை இல்லாமல்
மழையில் நனைந்தபடி!

நிறவொவ்வாமை...!


துடைக்க மறந்து
வெளிறிப்போன
பவுடர்பூச்சு!

நாணய அளவுகளைத் தாண்டும்
நெற்றி கன்னம்
நிறைத்தபோட்டு
நிற வொவ்வாமையில்!

பின்னிய கூந்தல்
அகல்விளக்காய்....
தனித்திருக்கும் கார்த்திகையில்!

கூரை ஏறிய
பூசணிக்கொடியில்
தென்பட்டு மறையும்
செங்கல் சூளை.....

அப்பாவின் சட்டை
அம்மாவின் புடவை
மாறிய வடிவங்களில்....!

அரிக்கேன் விளக்காய்
செம்மண் சாலைகளில்
எப்போதாவது நிற்கும் பேருந்துகள்!

அமாவாசை பகல்பொழுதுகளில்
மின்மினி பொறுக்கும்
மரப்பாச்சி பொம்மைகள்!

எத்தனை எறும்புகள்
செத்ததோ
யாருக்குத் தெரியும்
சீனி டப்பாவின் பக்கத்தில்!


ரூபாய்க்கு மூணு...!அதன் இருப்பு
கல்யாணப்புடவை என்றானதில்
என்னைவிட
அம்மாவிற்கே மகிழ்ச்சி அதிகம்!

வாழ்வின் மிச்சத்தை
இரும்புப் பெட்டிக்குள்
ஒளித்து வைத்திருக்கும்
தீபத்தில் எண்ணெய் வார்த்தது அது!

கசங்கிய பொழுதுகளை
முந்தாணையில் தேடும்
அக்காவைப்போலில்லை
செல்லப்பூனையின்
தலைக்கோதும்
கைரேகை செத்துப்போயிருக்கும்
அவளின்கரத்தில்
ஒவ்வொருத்தொடுதலும்
பூப்பூக்கவைக்கும் அதிசயம் ரசிப்பேன்!

கண்ணாடி நனைத்து
வழுக்கும் மழையாகவே
மாட்டிவைக்க பிரியம் காட்டாத
அவளின் ஞாபகம்!!
திடீரென முளைத்த
ஒரு திருநாளில்
கட்டாயத்தின் பேரில்
அப்பாவுடன் அது நிகழ்ந்ததாய்
கொஞ்சம் வெட்க்கத்தோடுசொல்லிக்கொள்வாள்....
சமீபத்து மழையில்
நனைந்திருந்த புடவையில்
கரைந்திருந்தது அது!

"ரூபாய்க்கு மூணு"
காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது
அந்த புகைப்படக்காரனின் குரல்.....
இதுவரை அடையாளம் இழக்காத
அவளின் ஞாபகமுட்டை
குஞ்சுப் போரித்ததே இல்லை
-நேற்றுவரை!

உயரம்-2


சிறுவயதில்
மொட்டைமாடி
கலங்கரை விளக்கக்கோபுரம்
ராட்சத ராட்டினம்.....

உயங்களின் விளிம்பு
தொடுகிரபோதெல்லாம்
பயத்தில் அலறிவிடுவேனாம்..
-அம்மாச் சொல்ல கேள்வி!

மனைவி சொல்கிறாள்
நேரம் கிடைக்கிறபோதெல்லாம்-
மற்றவர்கள் அலறுவதை
கீழிருந்து ரசித்தபடியே
என் உயரத்தை
உயர்திக்கொண்டிருகிறேனாம்......

யாருக்குத்தெரியும்
குறுக்கெழுத்துப் போட்டிக்கு
இடமும் வலமும் நிரப்பி விட்டால்
மேலிருந்து கீழ் சுலபம் என்று!

Followers

My photo
dubai, dubai, United Arab Emirates
துபாயில் உள்ள 89.4 தமிழ் பண்பலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறேன். வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என ஊடகங்களில் பணிபுரிந்துள்ளேன். என்னுடைய படைப்புகள் 9 புத்தக்கங்களாக வெளி வந்து இருக்கிறது. உணர்வுகளை தளங்களில் பகிர்ந்துகொள்ள துடிக்கும் தோழமை நெஞ்சத்துடன் நான்....

Total Pageviews

GEETHANJALI. Powered by Blogger.

Live Traffic Feed