கீதாஞ்சலி

இது முதல் மழை......... சின்ன துளிக்குள் கடலாக...... ஒற்றை சொல்லுக்குள் மடலாக.....

“தேசம்”


மலைகளாலும், மரங்களாலும், நதிகளாலும் சூழப்பட்டதல்ல இந்த தேசம்…!

இருட்டுக்கு வெள்ளையடிக்கும் ஒரு பகல்….. கனவுகளுக்கு இமைத்திறக்கும் ஒரு இரவு….. வாழ்வின் கதவுதிறக்கும் ஒரு சந்தோஷம்…..

ஒவ்வொரு திசையிலும் உணர்வுகளால் எழுதப்பட வேண்டிய எத்தனையோ விஷயங்களை மென்மையாய், உண்மையாய் ஒரு தென்றலாய் வீசிப்போகிறதே அந்த இனிமையின் அடையாளம் – நம் தேசம்!

சக்கரம் சுழல்கிறது – ராட்டினம் சுழல்கிறது – பூமி சுழல்கிறது – வித்தியாசங்களை பிரிக்கிற அறிவு – முன்வைக்கிற முதல்கால் “சமத்துவம்.”

மதங்களால் மனிதன் பிணைந்திருந்தாலும் அன்பினால் இணைத்திருக்கிறது நம் தேசம். கண்ணீரின் உப்புக்கரிப்புக்கும், கடல்நீரின் உப்புக்கரிப்புக்கும், வியர்வையின் உப்புக்கரிப்புக்கும் அழகாகவே அடையாளங்கள் தருகிற நம் வரலாறு புள்ளிவிவரங்களால் மட்டுமே அடங்கிவிடுவதில்லை. ரங்கோலியாய் அழகுப்படுத்தி பார்க்க ஆனந்த கூத்தாடுகிறது ஒவ்வொரு முறையும்….

எத்தனை படையெடுப்புகள், எத்தனை யுத்தங்கள், எத்தனை விதமான இன்னல்கள். தாங்கினோம், வாங்கினோம், நிமிர்ந்தோம், இன்று எழுந்து நிற்கிறோம்!

போராட்டம் என்கிற நீரோட்டத்தால் தான் தேசத்தின் நந்தவனம் பூத்துக்குலுங்குகிறது. அதன் தேரோட்டம் இப்போது திக்கெட்டும்….!

மின்மினிப் பூச்சியை தீப்பெட்டிக்குள் சிறைப்பிடிக்கும் சிறுப்பிள்ளைத்தனம் – தோட்டாக்களின் களவாடலில் துப்பாக்கியுடன் நிராயுதபாணியாய் இருக்க உண்டாகிற துர்ப்பாக்கியத்தனம் – கண்களை கட்டிவிட்டு உலகம் இருட்டு என்பதாய் போதிக்கும் அதிமேதாவித்தனம் –

தனங்களை சீர்ப்படுத்தவும், தழைகளை களையெடுக்கவும் வேண்டிய பூமி “சுதந்திரம்” என்பதை சத்தமாய் உச்சரித்தது!

சிறகு வெட்டி பறக்க விடுவதா சுதந்திரம்….
ஜன்னல் சாத்தி இருட்டுக் கொடுப்பதா சுதந்திரம் ….

இதோ சமுதாயம் தன் சிந்தனைகளை இப்படி கரும்பலகையில் எழுத துடிக்கிறது.

கப்பலை மிதக்கவிட்டு கலவரப்படுத்திய சகோதரர்கள் வாழ்ந்த தேசத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

கப்பல் கட்ட துணியாது கயத்தாறில் கர்ஜித்த கம்பீர மனிதன் சுவாசித்த பூமியில் சுவாசித்து கொண்டிருக்கிறோம்….

ஒவ்வொரு வார்த்தையையும் அணுகுண்டுகளாக்கி சமூகம் தன் இதய துடிப்பாக்கிய அந்த எட்டையப்புர கவிதைக்காரன் நடந்த பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

தேசத்தின் எல்லா விலா எலும்புகளும் கெம்புகோல்களாகி இருந்த காலங்களில்ர கண்ணியம், பண்பாடு,. கலாச்சாரம் பேணிய அடையாத்துக்குரிய சமூகம் நம் அனைவரின் சொத்து!

நிறங்களால் அந்நியப்படாத கொடி நம்முடையது. மனங்களால் அந்நியப்படாத சின்னம் நம்முடையது. தாமரைக்குளங்களிலும், புலிகள் சரணாலயங்களிலும், ஆலமர விழுதுகளிலும் வீசிவிட்டு தான் நம் காளரம் நுழைகிறது நம் தேசத்தின் காற்று!

முதல் முறையாய் வேர்க்கிற காற்றுக்கு விசிறி வீசுகிற பாக்கியம்…..

முதல்முறையாக தூசுதுடைத்து இருந்ததாக சொல்லிக்கொள்கிற வரலாறு நம் பாக்கியம்!....

எல்லா நதிகளிலும் நனைந்து எழுந்து ஈரம் சொட்ட வரவே பிரியம் காட்டும் நம் சங்கீதம்!

உலக வரைப்படத்தில் “இந்தியா” – எழுதப்பட்ட வாக்கியத்தை விட எழுந்து நிற்கி வாக்கியமாய் இன்று பார்க்கப்படுவது யாரால் ?

எத்தனை சாதனைகள், எத்தனை கண்டுபிடிப்புகள், எத்தனை பங்களிப்புகள் – உலகம் உற்று பார்க்கிறது. அதன் பறவைப்பார்வையில் நம்தேசம் இன்னும இன்னும் பிரமாண்டமாய்…..

ஒவ்வொரு சுதந்திர தினமும் ஏதோ “நாட்காட்டியின் அடையாளம் ” என்பதைவிட நம் இதயத்துடிப்பின் அடையாளம் என்பதாகவே சொல்லவேண்டியிருக்கிறது!

1947 ஆகஸ்டு 15க்கு ஒரு கௌரவம்! எதையும் உணர்வுகளால் மட்டுமல்ல இதயங்களாலும் உச்சரிப்பதே நம் தேசத்தின் இயல்பு!

கண்களை மூடிக்கொண்டு பார்க்கிறபோதும் பார்வைகள் விஸ்தாரமாகவே தெரிகிறது.

நமக்காக பார்க்கிறது நம் தேசம்!
தேசத்திற்காக வாழ்கிறோம் நாம்!
நேசமாய் சொல்வோமா – வாழ்க நம் தேசம்!

(SAIMIRA 24.7 இணைய வானொலியின் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் பதிவு செய்யப்பட்ட உரைச்சித்திரத்தின் எழுத்து வடிவம்).
*கொஞ்சம் காதுகொடுக்கலாமே பகுதியை கிளிக்கினால் கேட்க்கலாம்

Followers

My photo
dubai, dubai, United Arab Emirates
துபாயில் உள்ள 89.4 தமிழ் பண்பலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறேன். வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என ஊடகங்களில் பணிபுரிந்துள்ளேன். என்னுடைய படைப்புகள் 9 புத்தக்கங்களாக வெளி வந்து இருக்கிறது. உணர்வுகளை தளங்களில் பகிர்ந்துகொள்ள துடிக்கும் தோழமை நெஞ்சத்துடன் நான்....

Total Pageviews

GEETHANJALI. Powered by Blogger.

Live Traffic Feed

vaarppu
CO.CC:Free Domain