கீதாஞ்சலி

இது முதல் மழை......... சின்ன துளிக்குள் கடலாக...... ஒற்றை சொல்லுக்குள் மடலாக.....

பழம்பெரும் நடிகர் எம்என் நம்பியார் மரணம்!அமரர் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பரும் பழம்பெரும் நடிகருமான எம்.என்.நம்பியார் இன்று பிற்பகல் மரணமடைந்தார். அவருக்கு வயது 89.உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிர் இன்று பிற்பகல் பிரிந்தது.கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சேரி நாராயண் நம்பியார் என்ற எம்என் நம்பியார் தனது 13 வயதிலேயே சென்னை நவாப் ராஜமாணிக்கம் குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார். 1935-ம் ஆண்டு பக்த ராமதாஸ் என்ற படத்தின் மூலம் தனது திரையுலகப் பிரவேசத்தைத் துவங்கினார்.கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார் நம்பியார். மக்கள் திலகம் அமரர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவர் படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றிருந்தவர் நம்பியார். எம்ஜிஆரின் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார். இவர் நடிக்காத எம்ஜிஆர் படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். வில்லனுக்கு வில்லன் என்ற பட்டப் பெயரே இவருக்குண்டு.வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன் மற்றும் எங்க வீட்டுப் பிள்ளையில் எம்ஜிஆரும் நம்பியாரும் புதிய சகாப்தமே படைத்தார்கள்.எம்ஜிஆருக்கும் தனக்கும் இடையே எந்த மாதிரி நப்பு இருந்தது என்பதை நம்பியாரே ஒருமுறை இப்படிக் குறிப்பிட்டார் ஒரு விருது வழங்கும் விழா மேடையில்:எனக்கு எம்ஜிஆர் மேல ரொம்பக் கோபம். அவர் இருந்த வரைக்கும் எங்கே போனாலும் எம்ஜிஆர் என்றதும் உடனே மக்கள் நம்பியார் என்றும் சேர்த்தே உச்சரிப்பார்கள். இப்போ அவர் போய்ட்டாரு. மக்கள் என்னை மறந்துட்டாங்க... போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாம் அவர், என்று கூறி மேடையிலேயே கண் கலங்கினார்.அந்த விழாவில் தலைமை விருந்தினர் கலைஞர் மு.கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.எண்பதுகளில், வில்லன் என்ற நிலையிலிருந்து நம்பியாரை குணச்சித்திர நடிகராக மாற்றியவர் இயக்குநர் கே.பாக்யராஜ். கதாநாயகனுக்கு இணையாக நகைச்சுவையும் செண்டிமெண்டும் கலந்து அவர் நடித்த 'தூறல் நின்னு போச்சு', இன்றும் தமிழின் மிகச் சிறந்த படைப்பாகப் பார்க்கப்படுகிறது.சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெரும்பாலான படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நம்பியார். கடைசியாக ரஜினியுடன் பாபா படத்தில் நடித்தார்.நம்பியார் நடித்த கடைசி படம் விஜய்காந்தின் சுதேசி.தமிழ் தவிர, ஜங்கிள் என்ற ஆங்கிலப் படத்திலும், கணவனே கண்கண்ட தெய்வம் படத்தின் இந்திப் பதிப்பிலும் நடித்துள்ள நம்பியார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர். தனது 'நம்பியார் நாடக மன்றம்' மூலம் இரு நாடகங்களை பல முறை அரங்கேற்றியுள்ளார்.திகம்பரசாமியார் எனும் சூப்பர் ஹிட் படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதனை செய்தவர் நம்பியார் என்பது இன்னமும் பலருக்குத் தெரியாது.நம்பியார் என்றதும் பலருக்கும் உடனே நினைவுக்கு வருவது சபரிமலை அய்யப்பன்தான். ரஜினிகாந்த் உள்பட தமிழ் சினிமா நடிகர்கள் பலருக்கும் இவர்தான் குருசாமி. தொடர்ந்து 65 ஆண்டுகளாக தொடர்ந்து சபரி மலைக்குச் சென்று வந்தார் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். திரையில்தான் வில்லனாக நடித்தாரே தவிர, நிஜ வாழ்க்கையில் எந்த தீய பழக்கமும் இல்லாத, கடவுள் பக்தி மிக்க நேர்மையான மனிதாராகவே வாழ்ந்தார் நம்பியார்.பாஜகவின் முக்கிய தலைவராகத் திகழும் சுகுமாறன் நம்பியார் இவரது மகன்தான்.

அஞ்சலி:

கோபாலபுரத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலகினர் திரளாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நன்றி:தட்ஸ்தமிழ்.காம்

வன்முறைகளும் வரைமுறைகளும்!பொதுவா எல்லோருக்குள்ளும் ஒரு மிருகம் தூங்கிக்கொண்டு இருக்கும்;இருக்கலாம்...ஆனால் பலபேர் பலவிதமாக எழுப்பவோ, உசுப்பிவிடவோ எத்தனிப்பது கிடையாது. ஆனால் நேற்று நடந்த சம்பவம் "சென்னையா இது" என்று கேள்விக் கேட்கவைத்தது என்பதை வெட்க்கத்தோடு சொல்லித்தான் ஆகவேண்டும்....

தூங்கும் மிருகத்தை விழிக்க வைத்த விபரீதத்தை என்ன சொல்ல?
மாணவர்களுக்குள் சண்டைகள், சச்சரவுகள் எல்லாம், எல்லா காலங்களிலும் இருந்துகொண்டு வரும் ஒன்றாக இருந்தாலும் இதுவரை எந்த ஊடகத்திலும் இதுபோன்றதொரு வன்முறையை பார்த்திருக்கமாட்டோம்.

சட்டம் ஒழுங்கு காக்க படிக்கிற சட்டக்கல்லூரி மாணவர்கள் சட்டக்கல்லூரி வளாகத்திற்குள்ளேயே இப்படி காட்டுமிராண்டித் தனமாக நடந்துக்கொண்டது பொதுவாக எல்லா மாணவர்களையும் வருத்த்திர்க்குள்ளாக்கி இருக்கும் என்பதை மறுக்க முடியாது.

ஏன் இந்த வன்முறை எதற்காக இப்படி ஒரு அராஜகம்.ஒருகணம் யோசித்தால் இந்த விபரீதத்தின் உண்மை தெரியலாம்!

என்னதான் வாசலுக்கு வெளியே பாதுகாப்பு என்கிற பெயரில் காவல்துறை நின்றுகொண்டு இருந்தாலும் கண்ணெதிரே ஒரு வன்முறை நடந்து இருக்க பத்தடி தூரம் இல்லை அதை நிறுத்த முடியாதா என்கிற பாவமான கேள்வியை பாமரத்தனமாகத்தான் நம்மால் கேட்க முடிகிறது.

தொலைக்காட்சியில் இந்த பதிவை பார்த்த பலருக்கு உண்மையில் மனம் வலித்திருக்கும். என்னதான் அரசியல் ஆதாயம் இல்லை வேறு உள்நோக்கம் என்கிற பேச்செல்லாம் பேசப்பட்டாலும் கூட நடந்தது உண்மையில்லை என்று மறுக்க முடியாது.

தீவிரவாதிகள், தீவிரவாதம் இப்படி பேசிப்பேசியே மிதவாதிகளைக்கூட தீவிரவாதிகளாக்கிவிட்டு கொண்டிருக்கிறோம் என்கிற கேள்விக்கூட எழுவதுண்டு.என்ன பேசி என்ன இரண்டு உயிர்....

பொதுவாக தப்பேக்கூட செய்திருந்தாலும் இப்படியா ஓட ஓட விரட்டி அடித்து குமுறும் அட்டூழியம் .....இந்த கலாச்சாரம் உண்டாக யார் காரணம்?நீங்கள், நான், ஏன் நம்மை சுற்றி இருக்கும் எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் குற்றவாளிகளாக மாறியிருக்கிறோம்.

வன்முறையை கட்டவிழ்க்கும் இந்த காட்டுமிராண்டிக் கலாச்சாரம் பரவாமல் தடுக்க நாம் தான் முனையவேண்டும் . வரைமுறையில்லாமல் வந்துபோகும் இதுபோன்ற சம்பவங்கள் வாழும் சந்தர்ப்பங்களை வழுக்கி விழவைக்கும் தருணங்களாகவே அமைந்துவிடுகின்றன என்பதை சொல்லிக்கொள்ள வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.

எதையும் இரண்டுமுறை யோசித்து, மூன்றுமுறை ஆலோசித்து, ஒருமுறை முயலும் எந்த விசயமும் மாறிப்போய்விட்டதா என்று அஞ்சவைக்கிறது.
குற்றவாளிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறதா கல்லூரிச்சாலைகள்?குற்றங்களை தெரிந்துகொள்ளத்தான் வகுப்பறைக்குள் நுழைகிறதா இன்றைய மாணவ சமுதாயம்?
வன்முறைகளை விசாரிப்பதிலும், வரைமுறைப்படுத்துவதிலும் ஓய்வெடுத்துக் கொள்கின்றனவா முதுகெலும்பு இல்லாத பேனாக்கள்????

"சட்டக்கல்லூரிக்குள் வன்முறை" - தலைப்பு செய்தியாக்கிவிடும் பத்திரிகைகளின் நான்காம் பக்க நமத்து போன செய்திகளில் காபியோ டீயோ உறுஞ்சிக் கொண்டிருக்கும் இன்றைய பொழுதின் முகத்தில் ஆசிட் அடிக்க கடவது........

பி.கு: கசங்கிய காகிதமாய் அடிப்பட்ட அந்த இளைஞனை ஆட்டோவில் ஏற்றியது மிக மிக கொடுமை.....ஏன் ஆம்புலன்சை அழைக்க அந்த நேரத்தில் அவகாசம் இல்லையா......முதல் உதவி எல்லாம் இரண்டாம் உதவி ஆகிபோய்விட்டதா??????

Followers

My photo
dubai, dubai, United Arab Emirates
துபாயில் உள்ள 89.4 தமிழ் பண்பலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறேன். வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என ஊடகங்களில் பணிபுரிந்துள்ளேன். என்னுடைய படைப்புகள் 9 புத்தக்கங்களாக வெளி வந்து இருக்கிறது. உணர்வுகளை தளங்களில் பகிர்ந்துகொள்ள துடிக்கும் தோழமை நெஞ்சத்துடன் நான்....

Total Pageviews

GEETHANJALI. Powered by Blogger.

Live Traffic Feed