அவளை இப்படியொரு சந்தர்ப்பத்தில் சந்திப்பேன் என்று கனவில் கூட நினைத்திருக்கவில்லை. எப்படி இது சாத்தியம்....ஒருவேளை அவளை போல யாரோவோ.... அப்படி இருந்தால் முதலில் சந்தோசப்படுவது நானாகத்தான் இருக்கமுடியும். ஆனால் அது அவள் தான் சந்தேகமேயில்லை.......
எங்கள் தெருவின் தேவதை அவள். அவள் குடும்பம் வந்த பிறகுதான் எங்கள் நண்பர்கள் வட்டாரமே கொஞ்சம் தூர் வாரப்பட்டது என்றால் அது பொய்யில்லை. சின்ன வயசு அத்தனை விளையாட்டுத் தனங்களையும் வசீகரித்தவள் அவள்.ரொம்பவே அழகு.....
தங்களை பார்க்கமாட்டாளா என்பதாகவே ஒவ்வொரு குரூப்பும் எதிர்பார்க்க அவள் கொஞ்சம் திமிர் பிடித்தவள் போல் தெரிய ஆரம்பித்ததில் ஆச்சர்யமில்லை.
கல்லூரி சேர்ந்தபோது அவளுக்கு கல்யாணம் ஆனது....அம்மா கூட அவள் திருமணதிற்கு சென்று வந்தாள். அதன் பிறகு படிப்பு வேலை கல்யாணம் இப்படியாக ஓடிவிட்டது வாழ்க்கை. இந்த நிலையில் அவளை இப்படி ஒரு கோலத்தில்.... நினைக்கவே மனம் துடித்தது. நான் கூட அவளை ஒருதலையாய் நேசித்திருக்கிறேன். எப்படி இருந்தவள் ......ஒரு பழைய கசங்கிய காகிதமாக.....மனநிலை சரியில்லையா.....குடும்பத்தினர் யாரும் இல்லையா ????????????
மனைவியை பார்த்தேன். திருமணமாகி பத்தாண்டுகள் ஓடிவிட்டிருந்தாலும் இளமையாகவே தெரிகிறாள். வாழ்க்கை எந்த தேவதையையும், எந்த தேவனையும் விட்டு வைப்பதில்லை போல.
எங்கள் தெரு தேவதைக்காக கொஞ்சம் வேதனை பட மட்டும் தான் முடிந்தது.