கீதாஞ்சலி

இது முதல் மழை......... சின்ன துளிக்குள் கடலாக...... ஒற்றை சொல்லுக்குள் மடலாக.....

கதவு திறக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பங்களுக்காகவும்.....


எத்தனை முறை கதவு திறக்கப்படுகிறது -
எத்தனை முறை அழைக்கப்படுகிறோம் என்பதில் இருந்து தொடங்கி விடுகிறது படைப்புக்கான களம்.
மாட்டின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் மணியின் ஒலியில் ஆரம்பித்து, கரி படிந்து இருட்டை ஓட்டிக் கொண்டிருக்கும் எங்கள் வீட்டுச் சிம்னி விளக்கு வரை முடிந்திருக்கிற ஒரு பகல் என்னை மெல்லச் சாப்பிடத் தொடங்கியிருந்ததை மறுப்பதற்கில்லை.
நிறைவான விஷயங்களை அடிக்கடி ஞாபகப்படுத்தாமையால் குறைவான செய்திகளை மட்டுமே பேசிவிட்டு அமர்ந்துவிடுகிறோம். இல்லை அமர வைக்கப்படுகிறோம். என்னையும் எனக்குள் நிகழ்பவற்றையும் அடக்க அரும்பாடுபட வேண்டியிருக்கிறது. சிலநேரம் அடங்கிவிடுகிறேன்.
பலநேரம், அடக்கப்பட்டு விடுகிறேன்.அப்படி அடங்கிவிட்ட கர்வத்தில் காலரை இழுத்து விட்டபடி நடக்கிற போது லேசான சுயபச்சாதாபங்களைப் பெறவேண்டி எட்டிப் பார்க்கும் படைப்பாக ஆகிவிடுமோ என்கிற பிரக்ஞையில் எழுத மறுத்ததும், எப்போதாவது எழுதத் துடித்ததும் படைப்பாளன் என்கிற மாய வலையை எனக்குள் ஏற்படுத்தவில்லை என்பதை நண்பர்கள் வாயிலாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அது ஒருவித ஆறுதல். அந்த ஆறுதலைக்கூட ரகசியமாய் அனுபவிக்கிற அனுபவம்தான்.
ஒவ்வொரு நீராட்டலும் திவலைகளாய் உருட்டிச்சென்று கழுவிவிடுகின்றன எல்லாவற்றையும் முதல் குளியல் ஆரம்பித்து வைத்த சில்லிப்பு இன்றும் தொடர்கிறது என்றால் ஒருவித மயக்கம் கலந்த உணர்வுதான் வந்து போகிறது.
கவிதை, சிறுகதை, நாவல் - இப்படி எழுத்தின் வடிவங்களில் எழுதிப்பார்க்க ஆரம்பித்ததன் விளைவு படைப்பாளி என்று சொல்லிக்கொள் என்கிறது. இருந்தாலும், படைப்பாளிகளின் சுதந்திரம் வாசிப்பாளனின் கையில் இருக்கிறது என்பதும், வாசிப்பாளனின் எல்லை படைப்பாளனின் படைப்பால் தீர்மானிக்கப்படுகின்றன என்பதும் என்னைப் பெண்மூலமாக்கிப் பார்க்கிறது என்பது நிஜம்!
"காதல் திருடா" திரைப்படமும் திரைத்துறையில் பாடலாசிரியராக வெளி தெரிந்திருந்தாலும் இன்னும் கனமான படைப்பை எழுதவில்லை என்கிற ஏக்கம் இருக்கிற இந்தத் தருணத்தில் இந்தத் தொகுப்பு.
வானொலி, தொலைக்காட்சி, ஊடகத்துறையில் தயாரிப்பாளராக, அறிவிப்பாளராக, இயக்குநராக, தொகுப்பாளராக, பணிபுரிந்தாலும் பத்தாண்டுகளுககும் மேலான ஏக்கம் தீராத ஒட்டகப் பயணமாய் நீளவே செய்கிறது.
முதுகுகாட்டி குளிக்கும் கிராமத்துப் பெண்ணும், கண்ணாடி பார்த்துப் பல் துலக்கும் பட்டணத்து யுவதியும் நிறைந்த உலகில் நிழல் மிதிக்க அலறி வெற்றுப்பாதத்துடன் நடக்கிற எப்போதுமே பாவமாய் பார்க்கிற எழுத்துக்களை முன்னெடுத்துச் செல்லவே பிரியப்படுகிறேன்!
கறுப்பு வெள்ளையில் தீட்டப்பட்ட எந்த ஓவியமும் வண்ணங்களில் நனையாத கொடுமையை வெளிப்படுத்துகிறது என்று சொல்வதில்லை. கறுப்பும், வெள்ளையும் வண்ணங்களாக அங்கீகரிக்க படைப்புகளை நேர்மையாய்ப் பார்க்கிற மனோபாவம் வரும்! வரலாம்!
முன்னெடுத்துச் செல்கிற எதையும் நிறுததி விசாரிக்கிறவர்களிடம் கொஞ்சம் மௌனமாய் விசாரியுங்கள் என்கிறேன். பேசினால் ஒருவேளை உங்கள் மௌனம் அர்த்தமாகக் கூடும். ஜன்னல்கள் சாத்தியோ, கதவடைத்தோ மறுதலித்தாலும் ஒவ்வொரு முறையும் தன்முயற்சியை என்னில் இருந்தே ஆரம்பிக்கிறது எழுத்து வேதாளம்.பூச்சாண்டியைக் காட்டி சோறூட்டும் நிலைமையில் இப்போது நான்!
(எனது கவிதை தொகுப்பான "சயனகிளைகளில் கீழிறங்கும் வனம்" தொகுப்பின் என்னுரையில் இருந்து)

மழை விட்ட பிறகும்......

சந்திப்புகள் பலவிதங்களில் நிகழ்கின்றன. எந்த சந்திப்பிலும் மனம் ஒன்றிவிடுவதில்லை. இருந்தாலும் சில சந்திப்புகளை மனம் அசைபோடவே செய்கிறது.

ஒருவரை நீண்ட நாட்களுக்கு பிறகு எதிர்பாராமல் சந்தித்து விடுகிறோம். அந்த அபூர்வ தருணம் மண்வாசனையை போல் மனதில் வீசும்.காலிங் பெல்சத்தம், செல்போன் சிணுங்கல், கதவு தட்டும் ஓசை இப்படி எந்த வடிவத்தில் வரும் அழைப்புகள்....தெரியாத ஒன்றாகவே இருக்கின்றன. இருந்தும் சந்திப்பின் இனிமை சுகம்.

சிறைச்சாலைகளில்சந்திக்க வரும் உறவுகள்,நண்பர்கள் எல்லோரும் சோகம் சுமந்தாலும் எதோ ஒன்றில் விட்டத்தை பெரிதாக்கவே செய்கின்றனர் என்பதை சொல்லவேண்டியதில்லை.

பழகிய இடம், பேசிய வார்த்தைகள்,பார்த்த காட்சிகள் எல்லாமும் கம்பிகளுக்கு பின்னால் சடுகுடு ஆடலாம்.......உங்களுக்கு எப்படியோ என்னால் இப்படித்தான் இருக்க முடியும் என்பதை சொல்லாத சிலரின் அவதானிப்புகள் கேள்விக்கேட்க்கலாம். " எல்லா சந்திப்புகளும் சுகமா சோகமா என்று" ??????

என்னையும் உன்னையும் சந்திக்க வைத்த அந்த தருணத்தை என்ன வென்று சொல்வது-இப்படி கேள்வி கேட்க காதலும் ஒரு காரணம் அவ்வளவுதான்.
ஓராண்டுக்கு பிறகு இன்று ஷார்ஜாவில் இருந்து ஜியாவுதீன் குடும்பத்தினர் வந்திருந்தனர். UAE யில் உங்கள் சக்தி 94.7 பண்பலை வானொலியில் பணியில் இருந்தபோது நேயராக எனக்கு அறிமுகமான குடும்பம் இன்று சென்னைக்கு அதுவும் எனது அலுவலகத்திற்கு வந்தனர். மனது முழுக்க மகிழ்ச்சியுடன் அவர்களின் வருகை என்னை உற்சாக படுத்தியது.....வெளியே லேசான மழை....எனக்குள் இதமான அன்பின் மண் வாசனையை நுகரமுடிந்தது.

வானொலியில் இப்போதெல்லாம் உங்களை போல் நிகழ்ச்சி யாரும் வழங்குவதில்லை UAE யை விட்டு நீங்கள் வந்த பிறகு ஒரு பெரும் இழப்பை எங்களால் உணரமுடிகிறது எனபதாக ஜியாவுதீன் பேசியது சந்திப்பின் அவசியத்தை விட அந்த தருணத்தின் சந்தோசம் என்னை வெகுவாக கவர்வதாக இருந்தது.

நம்மை சந்திக்க வரும் நமது நண்பர்களாகட்டும், மற்றவர்களாகட்டும் சில இழப்புகளை பற்றியோ இல்லை பெற்றவைகளை பற்றியோ பேசுவது சம்பிரதாயமாக அமைந்து விடுகிறது என்பதை சொல்லமால் இருக்க முடிவதில்லை.இன்னுமிரண்டு நாளில் ஷார்ஜா செல்லவிருப்பதாக சொன்னார். சக்தியில் வேலையில் இருந்த போது இருந்த என் நினைவுகளை இந்த சந்திப்பு மீட்டு எடுப்பதாகவே பட்டது.

ரயில் சிநேகம் கூட சில நேரம் அபூர்வ விசயங்களை பரிமாறுவதாக அமைந்து விடலாம். பிறகு அந்த சந்திப்பின் தொடர்ச்சியை மனம் எதிர் பார்க்கவே செய்யும்...மழை விட்ட பிறகும் இலைகளின் வழியாக நீர் சொட்டிக்கொண்டு இருக்கிறதே அது போல.......

Followers

My photo
dubai, dubai, United Arab Emirates
துபாயில் உள்ள 89.4 தமிழ் பண்பலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறேன். வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என ஊடகங்களில் பணிபுரிந்துள்ளேன். என்னுடைய படைப்புகள் 9 புத்தக்கங்களாக வெளி வந்து இருக்கிறது. உணர்வுகளை தளங்களில் பகிர்ந்துகொள்ள துடிக்கும் தோழமை நெஞ்சத்துடன் நான்....

Total Pageviews

GEETHANJALI. Powered by Blogger.

Live Traffic Feed