கீதாஞ்சலி

இது முதல் மழை......... சின்ன துளிக்குள் கடலாக...... ஒற்றை சொல்லுக்குள் மடலாக.....

கதவு திறக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பங்களுக்காகவும்.....


எத்தனை முறை கதவு திறக்கப்படுகிறது -
எத்தனை முறை அழைக்கப்படுகிறோம் என்பதில் இருந்து தொடங்கி விடுகிறது படைப்புக்கான களம்.
மாட்டின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் மணியின் ஒலியில் ஆரம்பித்து, கரி படிந்து இருட்டை ஓட்டிக் கொண்டிருக்கும் எங்கள் வீட்டுச் சிம்னி விளக்கு வரை முடிந்திருக்கிற ஒரு பகல் என்னை மெல்லச் சாப்பிடத் தொடங்கியிருந்ததை மறுப்பதற்கில்லை.
நிறைவான விஷயங்களை அடிக்கடி ஞாபகப்படுத்தாமையால் குறைவான செய்திகளை மட்டுமே பேசிவிட்டு அமர்ந்துவிடுகிறோம். இல்லை அமர வைக்கப்படுகிறோம். என்னையும் எனக்குள் நிகழ்பவற்றையும் அடக்க அரும்பாடுபட வேண்டியிருக்கிறது. சிலநேரம் அடங்கிவிடுகிறேன்.
பலநேரம், அடக்கப்பட்டு விடுகிறேன்.அப்படி அடங்கிவிட்ட கர்வத்தில் காலரை இழுத்து விட்டபடி நடக்கிற போது லேசான சுயபச்சாதாபங்களைப் பெறவேண்டி எட்டிப் பார்க்கும் படைப்பாக ஆகிவிடுமோ என்கிற பிரக்ஞையில் எழுத மறுத்ததும், எப்போதாவது எழுதத் துடித்ததும் படைப்பாளன் என்கிற மாய வலையை எனக்குள் ஏற்படுத்தவில்லை என்பதை நண்பர்கள் வாயிலாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அது ஒருவித ஆறுதல். அந்த ஆறுதலைக்கூட ரகசியமாய் அனுபவிக்கிற அனுபவம்தான்.
ஒவ்வொரு நீராட்டலும் திவலைகளாய் உருட்டிச்சென்று கழுவிவிடுகின்றன எல்லாவற்றையும் முதல் குளியல் ஆரம்பித்து வைத்த சில்லிப்பு இன்றும் தொடர்கிறது என்றால் ஒருவித மயக்கம் கலந்த உணர்வுதான் வந்து போகிறது.
கவிதை, சிறுகதை, நாவல் - இப்படி எழுத்தின் வடிவங்களில் எழுதிப்பார்க்க ஆரம்பித்ததன் விளைவு படைப்பாளி என்று சொல்லிக்கொள் என்கிறது. இருந்தாலும், படைப்பாளிகளின் சுதந்திரம் வாசிப்பாளனின் கையில் இருக்கிறது என்பதும், வாசிப்பாளனின் எல்லை படைப்பாளனின் படைப்பால் தீர்மானிக்கப்படுகின்றன என்பதும் என்னைப் பெண்மூலமாக்கிப் பார்க்கிறது என்பது நிஜம்!
"காதல் திருடா" திரைப்படமும் திரைத்துறையில் பாடலாசிரியராக வெளி தெரிந்திருந்தாலும் இன்னும் கனமான படைப்பை எழுதவில்லை என்கிற ஏக்கம் இருக்கிற இந்தத் தருணத்தில் இந்தத் தொகுப்பு.
வானொலி, தொலைக்காட்சி, ஊடகத்துறையில் தயாரிப்பாளராக, அறிவிப்பாளராக, இயக்குநராக, தொகுப்பாளராக, பணிபுரிந்தாலும் பத்தாண்டுகளுககும் மேலான ஏக்கம் தீராத ஒட்டகப் பயணமாய் நீளவே செய்கிறது.
முதுகுகாட்டி குளிக்கும் கிராமத்துப் பெண்ணும், கண்ணாடி பார்த்துப் பல் துலக்கும் பட்டணத்து யுவதியும் நிறைந்த உலகில் நிழல் மிதிக்க அலறி வெற்றுப்பாதத்துடன் நடக்கிற எப்போதுமே பாவமாய் பார்க்கிற எழுத்துக்களை முன்னெடுத்துச் செல்லவே பிரியப்படுகிறேன்!
கறுப்பு வெள்ளையில் தீட்டப்பட்ட எந்த ஓவியமும் வண்ணங்களில் நனையாத கொடுமையை வெளிப்படுத்துகிறது என்று சொல்வதில்லை. கறுப்பும், வெள்ளையும் வண்ணங்களாக அங்கீகரிக்க படைப்புகளை நேர்மையாய்ப் பார்க்கிற மனோபாவம் வரும்! வரலாம்!
முன்னெடுத்துச் செல்கிற எதையும் நிறுததி விசாரிக்கிறவர்களிடம் கொஞ்சம் மௌனமாய் விசாரியுங்கள் என்கிறேன். பேசினால் ஒருவேளை உங்கள் மௌனம் அர்த்தமாகக் கூடும். ஜன்னல்கள் சாத்தியோ, கதவடைத்தோ மறுதலித்தாலும் ஒவ்வொரு முறையும் தன்முயற்சியை என்னில் இருந்தே ஆரம்பிக்கிறது எழுத்து வேதாளம்.பூச்சாண்டியைக் காட்டி சோறூட்டும் நிலைமையில் இப்போது நான்!
(எனது கவிதை தொகுப்பான "சயனகிளைகளில் கீழிறங்கும் வனம்" தொகுப்பின் என்னுரையில் இருந்து)

0 comments:

Followers

My photo
dubai, dubai, United Arab Emirates
துபாயில் உள்ள 89.4 தமிழ் பண்பலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறேன். வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என ஊடகங்களில் பணிபுரிந்துள்ளேன். என்னுடைய படைப்புகள் 9 புத்தக்கங்களாக வெளி வந்து இருக்கிறது. உணர்வுகளை தளங்களில் பகிர்ந்துகொள்ள துடிக்கும் தோழமை நெஞ்சத்துடன் நான்....

Total Pageviews

GEETHANJALI. Powered by Blogger.

Live Traffic Feed

vaarppu
CO.CC:Free Domain