வணக்கம் நண்பர்களே!
நான்காம் வகுப்புப் படிக்கும் என் அன்பு மகன் நா.விஜய அரவிந்த ஹரி
தன் குட்டி கேமராவில் நெருப்பின் நடனத்தை பதிவு செய்திருக்கிறான்....
தந்தையான நான் என் பங்கிற்கு ஒவ்வொரு படத்திற்கும் கவிதைகள் எழுதி இருக்கிறேன்.
வாசியுங்கள்...
உங்களின் விமர்சனங்களை பின்னூட்டம் இடுங்கள்....
அன்புடன்,
ரா.நாகப்பன்.
*புகைகிறபோதும் புரியவில்லை எரிகிறபோதும் தெரியவில்லை நெருப்பு சுடும் என்பது...!
*நெருப்பின் கேமராக் கண்களில் காணாமல் போனது மழலைக் கனவு!
*எல்லாம் எரித்தாயிற்று நெருப்பின் மிச்சமாய் சில கண்ணீர்த்துளிகள்!
*அம்மாவின் சமையலறை நெருப்பு காபி டம்பளரில் உதடு தொடுவதற்குள் பதறித் துடிக்கிறது நாக்கு...!
*நெருப்பிற்கு என்னத்தெரியும் சாம்பலாகும் பொருள்களின் மகிமைப் பற்றி!
*விட்டு வைப்பதில்லை எதையும்... விட்டுக்கொடுப்பதில்லை இதையும்,,,!
*புன்னகைப் பூக்கும் நெருப்புப் பூப்பறிக்க நினைக்கிறது மனசு!
*தீயின் "தீம் தரிகிட".... காற்றின் "சரிகமபதநி" .... சில்லென்ற காலை கொஞ்சம் அனல் வீசக் கடவது!
*அடவுக் கட்டும் நெருப்பு தெருக்கூத்துப் பார்க்கும் வீதி சிரித்துத் தொலைக்கும் வெட்கம் கெட்டக் காலை...
*வர வர மறதியை நெருப்புத் தின்னட்டும் கவிதையை கனவு கிழிக்கட்டும்!
*நெருப்பின் ஜன்னலை திற...அழகான ஓவியம் கண்சிமிட்டி அழைக்கலாம்...!
*நெருப்பின் நடைவண்டி என் மகனின் கேமராவில் பழகிக்கொண்டிருக்கிறேன் விழாமல் நடக்க நான்.....!