கீதாஞ்சலி

இது முதல் மழை......... சின்ன துளிக்குள் கடலாக...... ஒற்றை சொல்லுக்குள் மடலாக.....

"டேய் அங்கிள் வந்திருக்கார்டா ..."


பொதுவா எல்லோருக்குள்ளும் ஒரு பலவீனம் இருக்கும். என் பார்வையில் அது பலவீனம்னாலும் சிலபேருடைய பார்வையிலே அது பலம்னு கூட சொல்லிக்கலாம்.


எது பலம்?எது பலவீனம் எது?ங்கிறத லியோனியோ சாலமன் பாப்பையாவையோ கூப்பிட்டு பட்டிமன்றம் போடுற அளவிற்கு பட்ஜெட் பத்தல அதான் இருக்கவே இருக்கு நம்ம பிளாக் எழுத்திட்டேன்.


உங்க வீட்டுல பிள்ளைகள் இருக்காங்களா?........அப்படின்னா உங்களுக்கு நிச்சயம் இது பலவீனமாகக் கூட இருக்கலாம். என்ன ஒருமாதிரி போகுது பார்வை!!!!!!!!!!உண்மையத்தானே சொல்றேன். யாரோ வீட்டுக்கு வராங்க....விடுங்க நானே வரேன்னு வச்சுக்குங்க வழக்கம் போல டீயோ காப்பியோ சம்பிரதாய விருந்தோம்பலோட ஆரம்பிப்போம். நீங்களோ இல்லை உங்கள் மனைவியோ ஆரம்பிக்கலாம்.


உங்கள் வீட்டு செல்லத்தை பாவம் கூப்பிடுவீங்க. பரிதாபமாய் வந்து நிற்கும் உங்க சுட்டிகளை கடமைக்கு என் முன்னாடி நிப்பாட்டுவீங்க.....அது ஒரு மாதிரி என்னை பார்த்து முழிக்கும். நீங்க உடனே இப்படி ஆரம்பிப்பீங்க.....


"செல்லம் மாமாவுக்கு கத்தாழ கண்ணால ஆடிக்காட்டு..."எந்தவிதமான சங்கோஜமும் இல்லாமல் இடுப்பை அப்படியும் இப்படியும் ஆட்டியபடி ஆடும் உங்கள் சுட்டி.


இது முதல்முறையா என்ன அதுக்கு? பலமுறை வீட்டுக்கு பலபேர் வருகின்றனர். ஒவ்வொருவரிடமும் இப்படித்தானே ஆடிக்காட்ட வேண்டியிருக்கிறது.


"உங்களுக்கு தெரியுமா என்னமா ஜோக் அடிப்பான் தெரியுமா? மாமாவுக்கு அந்த லவ் ஜோக் சொல்லுமா"
ஏதோ இரட்டை அர்த்தத்தில் ஜோக் என்பதாக உங்கள் செல்லங்கள் சொல்ல நீங்களே பெரிதாக சிரித்தும் வைப்பீர்கள்.தர்மசங்கடத்துடன் நெளிய வேண்டி நான் நிமிர்ந்தாலோ "என்ன சார் சூப்பரா பண்றா இல்ல"என்பதாக என்னால் வழங்கப்படும் சர்டிபிகேட்டுக்காக காத்திருப்பீர்கள்.


ஒவ்வொரு வீட்டிலும் இதே நிலைமைதான். அந்நியர் யார் வந்தாலும் உங்கள் வீட்டுக் குழந்தைகளின் கச்சேரிகள் எந்த முன்னறிவிப்புமின்றி அரங்கேற்றிவிடுவீர்கள்.


அதில் என்னவோ அப்படியொரு அலாதி ஆனந்தத்துடன் செயல்படும் பெற்றோர்களை நடுவெயிலில் வெளியே முட்டிப்போட வைக்கலாமா இல்லை வீட்டுப்பாட நோட்டில் இம்போசிசன் எழுத வைக்கலாமா என்று பிள்ளைகள் யோசிப்பதாக ஒரு தகவல்.


இதாவது பரவாயில்லை. சிலப்பேர் தன்னையே பிரதானப்படுத்தி பேசுவதுதான் கொடுமை....


"சார் இது நான் எழுதின ஜோக் போனவாரம் தான் இத புக்குல வந்திருக்கு"
"இது நான் போட்ட கோலம் "
-எத்தனை புள்ளி கேட்ட்காவிட்டால் அவ்வளவுதான். எதோ சுனாமியில் சிக்கிக்கொண்டதுப்போல் முகம் அநியாயத்திற்கு ஒரு மாதிரியாய் மாறிப்போய்விடும்.


எனக்கு பல எழுத்தாளர்கள் நண்பர்களாக இருக்கின்றனர். இல்லை இப்படியும் சொல்லலாம் பல நண்பர்கள் எழுத்தாளர்களாக இருக்கின்றனர். எப்போதாவது அவர்கள் வீட்டிற்கு செல்கிறபோது தங்களின் செயல்களை பட்டியலிடுவது ஒரு பெரிய காரியமாகவே செய்வது பாவம்.


சமீபத்தில் ஒரு இசையமைப்பாளர் நண்பரை சந்திக்க அவர் இல்லம் சென்றேன். வழக்கம்போல் காப்பியுடன் வரவேற்றார். அமர்ந்து சிறிது நேரம்போனதும் கம்ப்யுட்டரை ஆன் செய்து ஹெட்செட்டை எடுத்து போட்டுக்கொள்ள சொன்னார். மாட்டிக்கொண்டேன். எதோ ஒன்றை ப்ளே செய்தார். கேட்டேத் தீரவேண்டும் என்பதில் அவரின் பிடிவாதம் தெரிந்தது.


"இது இப்பதான் கம்போஸ் செய்தேன்....எப்படி இருக்கு..."
" இது அந்த படத்துக்கு போட்ட tune .....இதுல ஜாஸ் கொஞ்சம் தூக்கலா இல்ல..."
-இப்படியாக அவர் பேசினார். என் பதில் என்ன என்பதைவிட பெறுவதில் காட்டிய ஆர்வம் அவரின் அடுத்த முயற்ச்சியில் எதை சொல்லலாம் என்பதிலேயே குறியாய் இருந்தது. பலம் என்பதைவிட பலவீனம் என்று சொல்ல முடியவில்லை.....


என் வீட்டு விலாசம் தெரிந்தால்தான் என் வீட்டிற்கு நீங்கள் வரமுடியும். விலாச அட்டையை கொடுக்காத போது எப்படி சாத்தியம்????????


யாராவது இப்படி கேட்டால்.....எப்படியோ இதையும் எழுதி உங்களை வாசிக்க வைக்க முயற்சிக்கும் நானும் அப்படிதானே?


என்ன செய்ய எல்லோருக்குள்ளும் பலமாய் பலவீனங்கள் குடியிருக்கின்றன. இதை யாராச்சும் இன்னொருத்தர்க்கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டாலும் ஆச்சர்யமில்லை....


"டேய் அங்கிள் வந்திருக்கார்டா ..." வீட்டிற்கு வந்திருக்கும் உங்களை வரவேற்றபடி மகனை அழைக்கலாம் நான்.
நீங்கள் இன்னொரு தலைப்புடன் உங்கள் ப்ளாகில் எழுத ஆரம்பிக்கலாம் .

1 comments:

கிளியனூர் இஸ்மத் September 18, 2008 at 12:36 AM  

ஐயா நாகப்பா அவங்க இப்படி இவங்க அப்படி ... ன்னு..மற்றவங்க பலவீனம்ன்னு நினைத்து உமது பலவீனத்தை வெளிப்படுத்தி விட்டீரே...!

சக்தியில் உம்மோடு உறவாட வாய்ப்பில்லை ஆனால் இங்கு தடையில்லை....

சினிமாவிற்கு பாட்டெலுதி நீர் சீர்ப்பெற வாழ்த்துக்கள்.....நன்றி

--கிளியனூர் இஸ்மத் துபாய்

Followers

My photo
dubai, dubai, United Arab Emirates
துபாயில் உள்ள 89.4 தமிழ் பண்பலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறேன். வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என ஊடகங்களில் பணிபுரிந்துள்ளேன். என்னுடைய படைப்புகள் 9 புத்தக்கங்களாக வெளி வந்து இருக்கிறது. உணர்வுகளை தளங்களில் பகிர்ந்துகொள்ள துடிக்கும் தோழமை நெஞ்சத்துடன் நான்....

Total Pageviews

GEETHANJALI. Powered by Blogger.

Live Traffic Feed

vaarppu
CO.CC:Free Domain