எனக்குள் ஆயிரம் கேள்விகள்...
விடைகிடைக்காமல்....!
எந்த வினாவும் விடைகளை பொத்திவைத்து என்னை கண்ணாமூச்சி ஆட வைத்ததில்லை...
ஒரு சின்ன கேள்வியின் நூலிழையில் தொடங்கிவிடும் என் காலைபொழுது விரிந்து, வளர்ந்து மாலைவரை எதோ ஒன்றை நிகழ்த்தி விட்டு ஓடிவிடுகிறது.
ஒரு வழியாய் ஒரு ஆண்டு ஆடி ஓடி முடிய போகிறது.
அப்படியா....!
நாளை முதல் புது ஆண்டு... நினைப்பின் கதகதப்பு...சில்லென்ற சுவாசம்...என்னை வசீகரிக்கிறது.
தீர்மானங்கள், எதிர்பார்ப்புகள், முன்வைப்புகள் என்பதான என் தேடல் இப்போதும் தீவிரப்படுத்தப்படலாம்.
புதுப்புத்தகக் கடையில் பெயர்சொல்லி வாங்கும் புத்தகத்தின் புதுவித வாசனை, பழைய புத்தகத்தின் கிழிந்த பக்கத்தில் ஒளிந்திருக்கும் மயிரிறகு சுமந்த பழுப்பேறிய வாசனை எதிலும் ஒன்றாத மனசு பட்டாம்பூச்சியாய் சிறகு விரிக்கிறது.
எழுத வேண்டும் என்கிற எண்ணத்தின் தீராத ஆசை...!
லேசாய் ஜன்னல் திறக்கிறேன்...
வெளிச்சம் நுழைய பார்க்கிறது...!
கோலம் தாண்டிய அதன் கீற்று என்னை தீண்டுகிறது. நான் என் நீண்டப் பயணத்தின் பிள்ளையார் சுழியை போட எத்தனிக்கிறேன்.
கனவு விற்பனைக்கு வர காலத்தாமதமாகலாம்-ஆனால்
சந்தைகளை முன் வைத்தே தற்போது கனவுக் காண ஆரம்பிக்கிறேன்.
வாழ்த்துகளை இன்றுகளுக்கு சொல்லி
நன்றிகளை நாளைகளுக்கு சொல்லும் தலை கீழ் விகிதத்தின் நூலறுந்த என் பட்டம் சரியாக என் வாசலில் விழுகிறது.
நான், நீங்கள், இன்னும் நம்மில் பலர்...
ஒன்றாக கூடுகிறோம்.
புது ஆண்டிற்கு வாழ்த்துகள் சொல்லியபடி சிணுங்குகிறது என் செல்போன்.
வேறென்ன வாழ்த்துகள் சொல்லி முடித்துக் கொள்கிறேன்.
-ரா.நாகப்பன்